புதுடெல்லி: தமிழகம், உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் முதலிடத்தையும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளதாக இவ்வாண்டுக்கான புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.
உலகச் சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில், 'இந்திய சுற்றுலாப் பயணி களின் புள்ளிவிவரம் 2022' என்ற அறிக்கையை துணை அதிபர் ஜக்தீப் தன்கர் வெளியிட்டார்.
அதில், இவ்வாண்டுக்கான உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையில் 15 கோடி பேரை ஈர்த்து தமிழகம் முதலிடத்திலும் ஒன்பது கோடி பயணிகளுடன் உத்தரப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், அதிக அளவில் 12.6 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்த்துள்ள மஹாராஷ்டிரா முதலிடத்திலும் 12.3 லட்சம் மக்களை ஈர்த்துள்ள தமிழகம் இரண்டாம் இடத்திலும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹாலை 2021-2022ல் 30 லட்சம் உள்நாட்டுப் பயணிகளும் 38,000 வெளிநாட்டுப் பயணிகளும் ரசித்துள்ளனர்.
அதேசமயத்தில், தமிழகத்தின் மாமல்லபுரத்தை 1.4 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். புதுடெல்லியில் உள்ள செங்கோட்டை, குதுப்மினார் ஆகியவற்றையும் உள்நாட்டுப் பயணிகள் அதிகம் ரசித்துள்ளனர். இந்தியாவில் 3,693 பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.