செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
0adaf25c-f1bf-4a8c-b363-0fd5d45cb419
-

ஆற்றுப் பள்ளத்தில் சாய்ந்த பேருந்து; 30 மாணவர்கள் காயம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பகுதியில் இருந்து சனுப்பட்டிக்குச் சென்ற அரசுப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த உப்பாறு ஆற்றுப் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அந்தப் பேருந்தில் பயணம் செய்த 50 பேரில் முப்பதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொது மக்கள் பள்ளத்தில் இறங்கி அவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மாடுகள் திரிந்தால் ரூ.3,000 அபராதம்

சென்னை: தலைநகர் சென்னைக்கு உட்பட்ட சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபராதத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ள சென்னை மாநகராட்சி, இனிமேல் மாடுகள் பிடிபட்டால் ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டு, பிடிபடும் மாட்டின் காதில் மாநகராட்சி வரிசை எண் பொருத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மனிதர்களை மனிதக் கழிவை அள்ளவைத்தால் இடைநீக்கம்

மதுரை: ''தூய்மைப் பணியாளர்களுக்கு எப்போதுதான் விடிவுகாலம் பிறக்குமோ தெரியவில்லை," என்று வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், "மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது," என்று கூறினர். இதுபோல், மனிதக் கழிவை அள்ளி சுத்தம் செய்யும் பணிக்கு மனிதரைப் பயன்படுத்தினால் ஆட்சியர்கள் இடை நீக்கம் செய்யப்படுவர் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

பாம்புக்கடிக்கு சிகிச்சை; பெண் மரணம்; உறவினர்கள் போராட்டம்

திருப்பூர்: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவலிங்கம்- அமுதா தம்பதியர் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, கடந்த 22ஆம் தேதி 45 வயது அமுதாவை பாம்பு கொத்தியது. திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை அமுதா மரணம் அடைந்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், "மருத்துவர்கள் சரியான சிகிச்சை அளிக்காததால்தான் அமுதா இறந்துவிட்டார். அவரது சாவிற்கு மருத்துவர்களே காரணம்," எனக் கூறி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் கோவிலில்

ரூ.300 கோடியில் மேம்பாட்டுப் பணி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ரூ.300 கோடி செலவில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளைக் காணொளி வழி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். ஓய்வுக் கூடம், நடைபாதை, மருத்துவ மையம், அன்னதானக் கூடம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட உள்ளன. ரூ.100 கோடி செலவில் பக்தர்களுக்கான தங்கும் விடுதிகள், பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம், விபூதி தயாரிப்பு கட்டடம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.