செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
bf7e60d3-a646-40e8-86dd-17e96d951c9f
-

ரூ.30 லட்சம் பணத்தில் அலங்காரம்

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடுப்பேட்டை காளியம்மன் கோவிலில் நவராத்திரிவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் நான்காம் நாளான

நேற்று முன்தினம் அம்மனுக்கு 30 லட்சம் ரூபாய் நோட்டு களால் தனலட்சுமி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. வித்தியாசமாகச் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தை திரளான பொதுமக்கள் கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சிறையில் சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்

கடலூர்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய அவர், 2003ஆம் ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. வழக்கில் ஆறு மாத சிறைத் தண்டனை பெற்ற சவுக்கு சங்கர், பணிநீக்கத்திற்கான கடிதத்தைப் பெற மறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஒரு மாதத்திற்கு பார்வையாளர்களைச் சந்திக்க சிறை நிர்வாகம் அவருக்குத் தடை விதித்திருந்தது. அதனை எதிர்த்து நேற்றுக் காலை முதல் அவர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

காவலர் தம்பதிக்கு வலைவீச்சு

மதுரை: மதுரை மாவட்டத்தில் தீபாவளிச் சீட்டு பணம் பிடிப்பதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவான காவலர் தம்பதியை காவல்துறையினர் தேடிவருகின்றனர். பரவை பேரூராட்சியைச் சேர்ந்த மோகன்குமார் மதுரை குற்றப்பிரிவு காவல் பிரிவில் உதவி ஆய்வாள ராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி தீபாவளிச் சீட்டு பணம் பிடிப்பதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 600 பெண்களிடம் தலா ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சொன்ன படி பணத்தை திருப்பித்தராமல் இழுத்தடித்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனை அடுத்து மோகன்குமார்-கஸ்தூரி தம்பதியினர் வீட்டைப் பூட்டிவிட்டு பணத்துடன் மாயமாகிவிட்டனர்.