நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராகவன் (படம்) என்ற 11 வயது மாணவனுக்கு அவனது நண்பன் குளிர்பானம் கொடுத்துள்ளான்.
அதனை அருந்தியதால் ராகவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராகவனுக்கு கொடுக்கப்பட்டது சாதாரண குளிர்பானம் அல்ல. அதில், அமிலம் (ஆசிட்) கலந்திருந்தது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உறவினர்களும் களியக்காவிளை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
குளிர்பானத்தில் அமிலம் கலந்து கொடுத்தது யார், காரணம் என்ன என்று காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவரது மகன் ராகவன் (உண்மைப் பெயரல்ல) அதேபகுதி யில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவன் உடல்நலமின்றி சுருண்டு படுத்துள்ளான்.
இதையடுத்து, சிறுவனிடம் என்ன சாப்பிட்டாய், என்ன குடித்தாய் என பெற்றோர் விசாரித்தபோது, பள்ளியில் உள்ள தன் சக நண்பன் அளித்த குளிர்பானத்தைக் குடித்ததாக ராகவன் கூறியுள்ளான்.
இந்த குளிர்பானத்தைக் குடித்தபிறகு ராகவனுக்கு வாந்தி, வயிற்றுவலி என உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ராகவனை உடனடியாக மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால், சிறுவனின் உடல்நலம் நாளுக்கு நாள் மோசமடையவே, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்க கொண்டுசென்றுள்ளனர்.
அங்கு ராகவனை 'ஸ்கேன்' செய்து பரிசோதித்த மருத்துவர்கள், அவர் குடித்த குளிர்பானத்தில் அமிலம் கலந்திருந்ததால் இரு சிறுநீரகமும் செயலிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ராகவன் மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக காரைக்காலில் தன் மகளை விட அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவனுக்கு, ஒரு மாணவியின் தாய் குளிர்பானத்தில் நஞ்சு கலந்து கொடுத்ததில் மாணவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

