சென்னை: தமிழகம் முழுவதும் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்புடைய, இரண்டாயிரம் வங்கிக் கணக்குகளை தமிழக காவல்துறை முடக்கி உள்ளது.
இதன் மூலம் ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வந்ததை அடுத்து, 'ஆபரேசன் கஞ்சா' நடவடிக்கையை காவல்துறை தொடங்கியது.
மாநிலம் முழுவதும் கஞ்சா வியாபாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் கஞ்சா விற்பனை, பயன்பாடு ஆகியவற்றுடன் தொடர்புள்ள குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கின.
இதையடுத்து கஞ்சா வியாபாரிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் தொடங்கிய 'ஆபரேசன் கஞ்சா 2.0' நடவடிக்கை, கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, தென் மாவட்டங்களில் போதைப்பொருள் பயன்பாடு நன்கு குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கஞ்சா வியாபாரிகளைக் கைது செய்வதுடன் நிற்காமல், அவர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கஞ்சா வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சி நிலவி வருகிறது.
இந்நிலையில், இரண்டாயிரம் கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கி, சொத்துகளைப் பறிமுதல் செய்ய தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

