மதுரை: மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வுகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில்தான் நடத்தப்பட வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.
பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, மத்திய பணியாளா் தோ்வாணையம் பல்வேறு தேர்வுகளை நடத்துகிறது.
இத்தேர்வுகளுக்கு மாநில மொழிகளிலும் வினாத்தாள் தயாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
மதுரையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பேசிய அவர், ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே தேசிய அளவிலான தேர்வுகள் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள்தான் அந்தத் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டினார்.
"தேசிய அளவிலான தேர்வுகளில் கேள்விகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் இருக்க வேண்டும். தற்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் வினாத்தாள்கள் உள்ளன. இது இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு சாதகமாக உள்ளது.
"தேர்வுகளுக்கான கேள்வித்தாள் தமிழில் இல்லை என்பது தமிழக இளையர்களுக்கு செய்யப்படும் அநீதி," என்றார் சு.வெங்கடேசன்.
இதற்கிடையே, மத்தியப் பணியாளா், பொது மக்கள் குறைகள், ஓய்வூதியத்துறை இணை அமைச்சா் ஜிதேந்திர சிங்குக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், மத்திய அமைச்சுகள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன அமைப்புகள், தீா்ப்பாயங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள 20,000 காலியிடங்களுக்கு பணியாளா் தோ்வாணையம், பணி நியமன அறிவிக்கையை வெளியிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
"இந்தத் தோ்வுகளுக்கு ஒரு கோடி போ் வரை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. பணி நியமனத் தோ்வுக் கேள்வித்தாள் இந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தோ்வில் மாநில மொழிகளுக்கு இடம் இல்லை. இது சமவாய்ப்பு என்ற கோட்பாட்டுக்கு எதிரானது. இந்தத்தோ்வுகளின் மூலம் பணி நியமனம் பெறும் ஊழியா்கள் நாடு முழுவதும் பணியமா்த்தப்பட உள்ளனா். உள்ளூா் மொழி அறிவு இல்லாமல் இவா்கள் மக்களுக்கு எப்படி சேவையாற்ற முடியும்?" என்று எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகளுக்கான கேள்வித்தாள் தமிழில் இல்லை என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்திக்கான தனி உரிமை கொடுக்கப்படுவதை எதிர்த்து, இந்தியாவுக்கான பொது உரிமையை நிலைநிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் சு.வெங்கடேசன்்.

