சென்னை: பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு இனி சொத்து கிடையாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா உத்தரவிட்டுள்ளார்.
சமுதாயம் தனது நல்ல பண்புகளை வேகமாக இழந்து வருவதாக வேதனை தெரிவித்த அவர், தங்களது நலனில் அக்கறை காட்டாத பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை ரத்து செய்வதற்கு பெற்றோருக்கு உரிமை உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, தனது சொத்துகளை மூத்த மகனுக்கு எழுதி வைத்திருந்தார். ஆனால், வயதான காலத்தில் தங்களைக் கவனிக்காமலும் மருத்துவச் செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால், தங்களது சொத்துகளை தங்களிடமே திருப்பித் தர உத்தரவிடக் கோரி பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. "மகன்களின் செயல்பாடு இதயமற்றது," என விமர்சித்த நீதிபதி, கவனிக்காத குழந்தைகளுக்கு சொத்துகள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக உத்தரவிட்டார்.