தூத்துக்குடி: சென்னை, தூத்துக் குடி துறைமுகங்களில் பச்சரிசியா, புழுங்கல் அரிசியா என்ற குழப்பத்தால் ஏறக்குறைய ஆயிரம் டன் இட்லி அரிசி எற்றுமதி செய்யப்படாமல் தேக்கம் அடைந்து இருப்பதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
நடப்பு பருவத்தில் நெல் சாகுபடி குறைந்துள்ளதால் பாசுமதி, புழுங்கல் அரிசியைத் தவிர மற்ற ரக அரிசி எற்றுமதிக்கு 20 விழுக்காடு வரி விதித்து மத்திய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பார்ப்பதற்கு பச்சரிசியைப் போன்று இருக்கும் இட்லி புழுங்கல் அரிசிக்கும் வரி செலுத்தவேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும் ஆலை உரிமையாளர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
துபாய், ஜப்பான், கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு தமிழகத்தில் விளையும் பாரம்பரிய இட்லி அரிசி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், சுங்கத்துறை அதிகாரிகளின் குழப்பத்தால் துறைமுகங்களில் 1,000 டன் புழுங்கல் இட்லி அரிசி ஏற்றுமதியாகாமல் தேங்கியுள்ளது.