சென்னை: சென்னை நந்தம்பாக் கத்தில் நடந்த ராணுவப் பணி களுக்கான தேர்வில் 'புளூடூத்' கருவியைப் பயன்படுத்தி தேர்வு எழுதிய வட மாநிலத்தைச் சேர்ந்த 29 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் சிலர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதியதும் தெரியவந்தது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' திரைப்படத்தில் மருத்துவருக்கான நுழைவுத்தேர்வில் காதில் 'புளூடூத்' மாட்டிக்கொண்டு கமல்ஹாசன் தேர்வெழுதி மருத்துவ ராகத் தேர்ச்சி பெறுவார்.
அதேபாணியில், நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற ராணுவத் தேர்வில் மாணவர்கள் தில்லுமுல்லு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் 'குரூப்-சி' பிரிவின்கீழ் வேலையில் சேர் வதற்கான தேர்வு நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவப் பள்ளியில் நடந்தது.
இத்தேர்வை வடமாநில இளைஞர்கள் உட்பட மொத்தம் 1,728 பேர் எழுதிக்கொண்டிருந்தபோது, ஒரு சில மாணவர்கள் மட்டும் தங்கள் காதுகளில் சிறிய அளவிலான 'புளூடூத்' கருவியை அணிந்துகொண்டு, தேர்வு மையத்துக்கு வெளியே இருந்தவர்களின் உதவியுடன் வினாக்களுக்கு விடை அளித்துக் கொண்டிருந்தனர்.
இதனை தேர்வு மைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த நந்தம்பாக்கம் காவலர்கள், அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 29 மாணவர்களும் அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த், ஹிசார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
தேர்வு எழுதுவதற்காக, டெல்லி யைச் சேர்ந்த ஒரு முகவர் மூலம் 'புளூடூத்' சாதனங்களை ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை விலை கொடுத்து வாங்கியதாகக் கூறினர்.
காதின் உள்ளே வைக்கும்போது மற்ற யாருக்கும் தெரியாத வகையில் சிறிதாக இருக்கும் இந்தச் சாதனம், சிறிய ஆண்டெனா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர். இளை யர்களின் புளூடூத்தைப் பறிமுதல் செய்து, அவர்களைச் சொந்தப் பிணையில் விடுவித்தனர்.

