வேன்மீது லாரி மோதியதில்
60,000 முட்டைகள் சேதம்
நாமக்கல்லில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் மீது அதன் பின்னால் வந்த லாரி மோதியதில் மூன்றரை லட்சம் மதிப்புள்ள முட்டைகள் உடைந்து சேதமடைந்தன. நேற்று அதிகாலை தலைவாசலை அடுத்த மணிவிழுந்தான் பகுதியில் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, லாரி ஒன்று வேகமாக வந்து மோதியதில் 60,000 முட்டைகள் உடைந்து வீணாயின. இதுகுறித்து தலைவாசல் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். படம்: ஊடகம்
தாமரைக் குட்டையில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு
அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராகவன், சிபினேஷ், நந்த கிஷோர். நண்பர்களான மூவரும் ஐந்தாம் வகுப்பில் படித்து வந்தனர்.
தங்கள் வீட்டுக்கு அருகே உள்ள தாமரைக் குட்டையில் மூவரும் குளித்துக்கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உடல்களைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். குட்டைக்குப் பாதுகாப்பு வேலி போடவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களை அச்சுறுத்திய கல்லூரி மாணவர்கள் மூவர் கைது
சென்னை: சென்னையில் ரயிலில் பயணம் செய்த சில இளைஞர்கள் ரயில் நிலைய நடைபாதையில் வாள், பட்டாக்கத்தி, அரிவாளால் உரசியபடி சென்ற காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து, சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்களைக் கொருக்குப்பேட்டை காவலர்கள் கைதுசெய்தனர். அவர்களில் இருவர் 18 வயதை நிரம்பாதவர்கள்.
"இளையர்கள் வைத்திருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளோம். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அபாயகரமான ஆயுதங்களுடன் ரயிலில் பயணம் செய்தது, படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்ததை அடுத்து ரயில்வே சட்டத்தின்படி கைதுசெய்துள்ளோம்," என ரயில்வே காவல் ஆணையர் உமா கூறியுள்ளார்.
5,447 மாடு உரிமையாளர்களுக்கு
ரூ.87 லட்சம் அபராதம்
சென்னை: சென்னை சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சில நேரத்தில் விபத்தும் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் மாடுகளை அவிழ்த்துவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இத்தொகையை இம்மாதம் 1ஆம் தேதி முதல் ரூ.2,000 ஆக உயர்த்தி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த ஒன்பது மாதங்களில் சாலைகளில் சுற்றித் திரிந்த 5,447 மாடுகளின் உரிமையாளர்களுக்கு 87 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாணவிக்கு தாலி கட்டிய மாணவன், காணொளி வெளியிட்டவர் கைது
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் பேருந்து நிலையத்தில் சீருடையில் இருந்த பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய கல்லூரி மாணவனை குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின்கீழ் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையக் காவலர்கள் கைதுசெய்தனர். மாணவனை பண்ருட்டி சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பவும் காவலர்கள் திட்டமிட்டுள்ளனர். மாணவிக்கு கடலூரில் உள்ள காப்பகத்தில் மூன்று நாள்கள் ஆலோசனை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமணக் காணொளியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பாலாஜி கணேசன் என்பவரையும் காவலர்கள் கைதுசெய்தனர்.

