தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அரவணைப்போர் யாருமின்றி ஆதர வற்றவராக இறந்த ஏறக்குறைய 150 பேரின் சடலங்களை சொந்த செலவில் முறையான சடங்குகளுடன் காவல்துறையைச் சேர்ந்த இருவர் அடக்கம் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல்நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றும் மனோகரன், 51, கிழக்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவ லராகப் பணியாற்றும் ரகுநாதன், 45, ஆகிய இருவரது பொதுநலச் சேவைகளையும் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு உறவினர், நண்பர்கள் யாருமின்றி ஆதரவற்றவராக உயிரிழப்போரின் சடலங்களை இவர்கள் நல்லடக்கம் செய்து வருகின்றனர்.
அண்மையில் தஞ்சை மருத்துவக்கல்லுாரி சவக்கிடங்கில் 32 சடலங்கள் அடையாளம் தெரியாமல் உரிமை கோரப்படாமல் இருந்தன.
"சடலங்களுக்கு யாரும் உரிமை கோராமல் இருந்தால் ஒருவாரத்தில் அவை அடக்கம் செய்யப்படும்," என அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகும் யாரும் உரிமை கோரி வராததால், மனோகரனும் ரகுநாதனும் சேர்ந்து 32 சடலங் களையும் அவசர சிகிச்சை வாகனத்தில் சாந்திவனம் இடுகாட்டிற்கு கொண்டுசென்று, ஈமச் சடங்குகளை முறைப்படி செய்து, அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து மனோகரன் கூறுகையில், "மருத்துவக் கல்லுாரி காவல்நிலையப் பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகளில் ரகுநாதனு டன் சேர்ந்து சொந்த செலவில் 150க்கும் மேற்பட்ட சடலங்களை அடக்கம் செய்துள்ளோம்.
"மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனமும் அடக்கம் செய்வதற்கு உதவி செய்துள்ளது. நாங்கள், இதனை ஒரு சேவை யாகக் கருதியே செய்து வருகிறோம்," என்று தெரிவித்தார்.

