தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
சென்னை: 'மின்னல் ரவுடி வேட்டை' நடவடிக்கை மூலம் தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 3,095 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை நீடிக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சேலத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த சேலத்தைச் சேர்ந்த 24 வயது நவீன் சக்கரவர்த்தி, 24 வயது சஞ்சய் பிரகாஷ் ஆகிய இருவரும் பிடிபட்டனர்.
இருவருடன் தொடர்புள்ள இடங்களில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
தமிழகத்தில் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவது தொடர்பான விவரங்கள் அவற்றில் இடம்பெற்றிருந்தன. முக்கிய அரசியல் தலைவர்களைக் கொலை செய்வதற்கு இருவரும் திட்டமிட்டிருந்ததும் அதற்காக இணையம் வழி துப்பாக்கிகள் வாங்கியது குறித்த தகவல்களும் தெரியவந்தன.
மேலும், தாக்குதல் நடத்தும்போது காவல்துறையிடம் சிக்கினால் உயிரை மாய்த்துக்கொள்ள சயனைட் குப்பியும் தயாரித்துள்ளனர். கைதான இருவரும் விடுதலைப்புலிகளின் மறைமுக ஆதரவாளர்கள் சிலருடன் தொடர்பில் இருந்ததாகவும் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள 'வாக்கி டாக்கி' பயன்படுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை மூலம் தமிழகத்தில் நடத்தப்பட இருந்த மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், தமிழகம் மற்றோர் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதியன்று, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் இயக்கம் பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்தப் பேரணியின்போது ஒரு தரப்பினர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை குறிப்பு அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து, பேரணியை முன்னின்று நடத்தும் மதுரை, கோவை பகுதிகளைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் முக்கிய நிர்வாகிகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து, தமிழகம் முழுவதும் காவல்துறை 'ஆபரேஷன் மின்னல்' என்ற பெயரில் ரவுடிகளைக் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் கடந்த மூன்று நாள்களில் மட்டும், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் பிடிபட்டுள்ளனர்.
தென் மாவட்டங்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ராக்கெட் ராஜா உள்ளிட்டோர் கைதாகி உள்ளனர்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட ஒன்பது மாநகரக் காவல்துறை ஆணையர்கள், 37 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது 3,095 ரவுடிகள் கைதாகினர்.
அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், அரிவாள், பட்டாக்கத்திகள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதானவர்களில் 489 பேர் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ரவுடிகள் ஆவர்.
216 பேர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர்கள் என்றும் 2,390 பேர் காவல் நிலையப் பதிவேடு குற்றவாளிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரிடமும் நன்னடத்தைப் பிணைப் பத்திரம் எழுதி வாங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.