கோவை: காவல்துறையினர் பல்வேறு பிரச்சினைகளால் மன அழுத்தத்துக்கும் உளைச்சலுக்கும் ஆளாகி வரும் நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் கோவை மாநகரக் காவல் நிலையங்களில் மகிழ்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கோவை மாநகரக் காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தலா இரண்டு 'மகிழ்ச்சி அலுவலர்கள்' தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் காவல் ஆணையரின் பிரதிநிதிகளாகச் செயல்படுவர் என்றும் காவலர்கள் எதிர்கொள்ளும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி, உதவிகரமாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மகிழ்ச்சி அலுவலர்களுக்கு மன அழுத்த மேலாண்மை தொடர்பாக சிறப்புப் பயிற்சி அளிக்க ஏதுவாக மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனநல ஆலோசகர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மனநலம் தொடர்பான சவால்கள் உள்ள காவலர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.
"மேலும், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத காவலர்கள், மக்களிடம் பண்பாகப் பேசுவதில் பிரச்சினைகள் உள்ளவர்கள், மனநலம் தொடர்பான ஆலோசனை தேவைப்படுவோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்," என காவல்துறை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

