சென்னை: அதிமுக இரு பிரிவாகச் செயல்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் அக்கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்பார்களா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
பேரவையில் இருக்கைகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் அதிமுகவின் இரு பிரிவினரும் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
இரு மனுக்களையும் பரிசீலித்து வருவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் எதிர்வரும் 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.
அச்சமயம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அருகே உள்ள இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர முடியுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாக முடிவெடுக்கும்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தம்மிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கும் அலுவல் ஆய்வுக்குழுவில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற அடிப்படையில், ஆர்.பி.உதயகுமாரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்திருப்பதாகத் தெரிகிறது.
சபாநாயகர் இதை ஏற்கும் பட்சத்தில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவார். மேலும், பேரவையில் அவரது இருக்கை மாற்றி அமைக்கப்படும்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால், பன்னீர்செல்வம் தரப்பினர் பேரவை நடவடிக்கைகளைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை ஏற்கப்பட்டால் பழனிசாமி தரப்பினர் அவை நடவடிக்கைகளைப் புறக்கணிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

