ஐந்து மாதங்களில் 7,382 விமானங்கள் கோவையில் இருந்து இயக்கம்
கோவை: கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் கோவையில் இருந்து 7,382 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையரகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1,460 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. கொரோனா நெருக்கடிக்குப் பிறகு விமானப் போக்குவரத்துத் துறை மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் விமானப் போக்குவரத்தில் நிலையான வளர்ச்சி காணப்படுவதாக கோவை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தி திணிப்பு: வைரமுத்து எதிர்ப்பு
சென்னை: தமிழகத்தில் தமிழர்கள் ஆளும்போதே இந்தி மொழியைத் திணிப்பது என்ன நியாயம் என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "எங்களை ஆண்ட இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ வெள்ளையரோ தங்கள் தாய் மொழியை எங்கள் தலையில் திணித்ததில்லை. தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? அதிகாரமிக்கவர்களே அன்போடு சொல்கிறேன், புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக," என்று தமது பதிவில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

