சென்னை: வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள புகார் தொடர்பில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியரிடம் விசாரணை நடத்த தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், தங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இதையடுத்து, வாடகைத்தாய் மூலம் இருவருக்கும் குழந்தை பிறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியர் மீறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
கர்ப்பப்பை குறைபாடு, கரு கலைவது போன்ற மருத்துவக் காரணங்கள் இருந்தால் மட்டுமே வாடகைத் தாயை நாட முடியும்.
வாடகைத் தாய்க்கு மருத்துவக் காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
இந்நிலையில், திருமணமான நான்கு மாதங்களுக்குள் இரு குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
இருவரும் விதிமுறைகளைப் பின்பற்றி வாடகைத்தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுள்ளனரா என்று சுகாதாரத்துறை மூலம் விசாரிக்கப்படும் என அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.