ரயிலில் மாணவியை கீழே தள்ளி கொலை: தனிப்படைகள் அமைப்பு
சென்னை: சென்னை பரங்கிமலையில் மின்சார ரயிலில் இருந்து மாணவியைக் கீழே தள்ளிவிட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பாகி உள்ளது.
சதீஷ் என்ற இளைஞர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியைக் கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விதி மீறல் எனில் நயன்தாராவுக்கு 10 ஆண்டு சிறை வாய்ப்பு
சென்னை: வாடகை தாய் சட்டத்தை மீறி இருந்தால் நடிகை நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் திடீரென கடந்த 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை, தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் டுவிட்டரில் தெரிவித்தார்.
மருத்துவ ரீதியாக குழந்தை பெற முடியாதவர்கள்தான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறலாம் என வாடகைத் தாய் சட்டம் சொல்கிறது. ஆனால் அந்த சட்டத்தை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காற்றில் பறக்க விட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
நளினி விடுதலை வழக்கு:
இன்று விசாரணை
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கும் மேலாக சிறையிலுள்ள தங்களை விடுவிக்கக்கோரி நளினி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர வுள்ளது. இவ்வழக்கில் நீதிமன்ற முடிவுக்கு கட்டுப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் கடந்த மே மாதம் 18ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

