சென்னை: சிவகாசி பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசு விற்பனையை டெல்லியில் அனுமதிக்குமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், வேறு எந்த மாநிலமும் பட்டாசுக்கு முழுமையாகத் தடை விதிக்காதபோது, டெல்லியில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை நீக்குவதன் மூலம் சிவகாசியைச் சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் குறிப்பாக, வாழ்வாதாரத்துக்காக இந்தத் தொழிலை நம்பியுள்ள பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற இயலும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற் பனையை டெல்லியில் அனுமதிக்கு மாறும் கெஜ்ரிவாலை ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்த தடை விதிக்கக்கூடாது என கடந்த 2021 அக்டோபரில் தான் கெஜ்ரிவாலிடம் வலியுறுத்தி இருந்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.
கொண்டாட்டத்தின் அடையாளமாக பட்டாசுகளை வெடிப்பது என்பது அனைத்துலக நடைமுறை தான்.
இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காணங்களாக வாகனங்களும் தொழிற்சாலை கழிவுகளும் உள்ள நிலையில், ஒரு சில நாள்களில் மட்டும் வெடிக்கப்படும் பட்டாசுகளால் மிகக் குறைந்த அளவிலான மாசுபாடே ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு அறிவியல் முறைப்படி தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகளை விற்பதற்கு உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

