செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d505f7e6-38db-4d97-be6a-b0f64e56c74f
-

இந்தியாவின் முதல் தேவாங்கு

சரணாலயம் தமிழகத்தில் அமைகிறது

கரூர்: இந்தியாவில் தேவாங்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம் தமிழகத்தின் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. பெரும்பாலும் மரங்களில் வாழும் பாலூட்டி இனமான தேவாங்குகள் (படம்) அருகி வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளதால் இந்த இனத்தைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கடவூர் பகுதியில் அமைவதால் 'கடவூர் தேவாங்கு சரணாலயம்' என அழைக்கப்படுகிறது. இதில் கரூர் வனப்பகுதியும் அடங்கும்.

'ஊஞ்சல்', 'தேன்சிட்டு', 'கனவு ஆசிரியர்' இதழ்கள் வெளியீடு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்கென பருவ இதழ்களை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது. 'ஊஞ்சல்', 'தேன்சிட்டு', 'கனவு ஆசிரியர்' என்ற மூன்று இதழ்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட அவற்றை பள்ளிக்குழந்தைகளும் ஆசிரியர்களும் பெற்றுக்கொண்டனர்.

தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 'ஊஞ்சல்' இதழும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 'தேன்சிட்டு' இதழும் மாதம் இருமுறை வெளியிடப்படுகிறது. குழந்தைகளின் படைப்புகள், முக்கிய தகவல்கள், செய்திகள், சுவையான கதைகள் போன்றவை இவ்விதழில் வெளியிடப்படும்.

அத்துடன், ஆசிரியர்களுக்கென 'கனவு ஆசிரியர்' மாதாந்திர இதழில் ஆசிரியர்களின் படைப்புகள், வகுப்பறை அனுபவங்கள், சிறப்புக் கட்டுரைகள் வெளியாக உள்ளன.

17 ஆண்டுகளுக்குப் பிறகு

நிரம்பும் பஞ்சப்பட்டி ஏரி

கரூர்: கரூரில் உள்ள 1,170 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பஞ்சப்பட்டி ஏரி கடைசியாக 2004ல் நிரம்பியது. அதன்பிறகு நீர்வரத்து இன்றி காய்ந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் கடவூர் மலையில் பெய்த கனமழை காரணமாக பஞ்சப்பட்டி ஏரியில் நீர் நிரம்பி வருகிறது.

17 ஆண்டுகள் கழித்து நீர்வரத்து அதிகமானதால் பஞ்சப்பட்டி ஏரியை அந்தப் பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர். புதர் மண்டி காடு போல காட்சி அளிக்கும் ஏரிக் கரையோரப் பகுதியைத் தூர் வாரி பராமரிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.