சென்னை: அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி அதிகாரி, கணினி பயிற்றுநர் உள்ளிட்ட பணி இடங்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 2,849 ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
இதேபோல், பணிக்காலத்தில் காலமான ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் 269 பேரின் வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள இடங்களையும் நிரப்ப முதல்வர் ஸ்டாலின் முழு சுதந்திரம் அளித்துள்ளதாகக் கூறினார்.
"எங்கெங்கு எல்லாம் காலி யிடம் இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் ஊழியர்களை நிரப்பும் வகையில் எங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
"இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை சார்பாக 2,849 ஆசிரியர்களுடன் இதர பள்ளிகளையும் சேர்த்து ஏறக்குறைய 3,200 ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படும்," என்றும் அவர் கூறினார்.
பள்ளிக் கல்வித் துறை மூலம் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கு முதல்வர் இலக்கு வைத்துள்ளதாக கூறிய அன்பில் மகேஷ், ஆசிரியர்கள் மனது வைத்தால் தான் முதல்வர் கொண்டுவரும் திட்டங்களை வெற்றிபெறச் செய்யமுடியும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, தியாகி சங்கர லிங்கத்தின் நினைவு நாளை முன்னிட்டு, சமூக வலைத்தளத்தில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்தி உண்ணா விரதமிருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கத்தின் நினைவு நாளில் அவரது தியாகத்தைப் போற்று வோம்," எனத் தெரிவித்துள்ளார்.
சங்கரலிங்கத்திடம் உறுதி கூறியபடி தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டியதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

