சென்னை: சட்டப்பேரவையில் அதிமுக வரிசையில் பன்னீர் செல்வத்துக்கு இடம் ஒதுக்கக் கூடாது என பழனிசாமி தரப்பினர் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது போல் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் இடம்கொடுக்கக் கூடாது," என்று கூறினார்.
சட்டவிதிகளின்படி பேரவைத் தலைவர் அப்பாவு முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ள ஜெயக்குமார், "உயர் நீதிமன்றத்தால் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கட்சி என்பதே கிடையாது. அதன்பிறகு அவருக்கு எப்படி அதிமுக வரிசையில் இடம் ஒதுக்கமுடியும்," என்றும் அவர் கேட்டுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமமுகவுடன் அதிமுக கூட்டணி வைக்க 100 விழுக்காடு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

