கோவை: வரும் 24ஆம் தேதி தீபாவளித் திருநாள் கொண் டாடப்பட உள்ளது. இந்தத் திருநாளில் பலகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.
இதையடுத்து, கோவையில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் இரண்டு விமானங்களில் இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
சிங்கப்பூருக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் மூலம் இரண்டு டன் இனிப்புகளும் சார்ஜாவுக்கு ஏர் அரேபியா விமானம் மூலம் மூன்று டன் இனிப்புகளும் இன்றுமுதல் ஏற்றுமதி செய்வதற்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இனிப்புகள் அனைத்தும் இன்று சனிக்கிழமை முதல் தினமும் 200 முதல் 300 கிலோ வரை அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதில் லட்டு, அல்வா, பால் இனிப்புகள் உள்ளிட்ட பலகாரங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கோவையிலிருந்து அனுப்பப்படும் இனிப்புகளின் அளவு அதிகம்.
ஆனால், இதைவிட சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிக அளவில் இனிப்புகள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

