சென்னை: ராயப்பேட்டையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் நடைபெற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், இளையர்கள் திசை மாறிச் சென்றுவிடாதபடி வளர்க்கும் பொறுப்பு பெற்றோர் களுக்கும் இருக்கிறது என்று கூறி உள்ளார்.
"ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்கான உத்தரவைக் கொடுக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளது பெருமையாக உள்ளது. இதைவிட முதல்வருக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது.
"சத்யா என்ற மாணவிக்கு நேர்ந்த துயரத்தை அறிந்து நான் நொறுங்கிப் போயுள்ளேன். அதை அறிந்தவர்கள் துயரத்தில் இருப்பார்கள்.
"சில இளைஞர்கள் என்ன மாதிரியாக வளர்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.
"இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில நிகழக் கூடாது. இதுவல்ல நாம் காண விரும்பும் சமூகம், இனி எந்தப் பெண்ணுக்கும் இது போன்று நிகழாமல் தடுக்க வேண்டிய கடமை ஒரு சமூகமாக நமக்கு இருக்கிறது.
"தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அறிவாற்றல், தனித் திறமை, சமூக நோக்கம் கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். பாட புத்தகக் கல்வி மட்டுமல்ல சமூக கல்வியும் அவசியமானது.
"தன்னைப் போலவே பிற உயிரையும் மதிக்க கற்றுத் தர வேண்டும். நல்லொழுக்கப் பண்பு கொண் டவர்களாக இளைஞர்கள் வளர்ந்து வாழ்ந்து சமூகத்திற்கான பங்களிப்பை வழங்க வேண்டும்.
"அவர்கள் எந்த வகையிலும் திசை மாறிச் சென்று விடாதபடி வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.
"பள்ளி கல்லூரிகளும் பெற்றோர்களும் இளைய சக்தியை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்," என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயிலிலிருந்து 20 வயது மாணவி சத்யா கீழே தள்ளப்பட்டு கொல்லப் பட்டுள்ளார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் 23 வயது சதீஷ் என்பவரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
சதீஷ் ஒருதலையாக சத்யாவை காதலித்து வந்ததாகவும் அதை ஏற்றுக் கொள்ளாததால் சதீஷ், ரயிலில் பயணம் செய்த சத்யாவை கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப் படுகிறது. இதில் மாணவி நசுங்கி உயிரிழந்தார்.

