சென்னை: பெரியகுளம் அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சொந்தமான பண்ணை வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் ஓபிஎஸ்ஸின் பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டின் மதில் சுவர்மீது ஏறி குதித்து வெள்ளிக்கிழமை இரவு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர், வீட்டின் கீழ் தளத்தின் கதவை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால், கதவை உடைக்க முடியவில்லை.
இதனால் படிக்கட்டு வழியாக கொள்ளையர்கள் மாடிக்குச் சென்று அங்கு இருந்த ஓர் அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை கொள்ளையர்கள் உடைத்துள்ளனர். அங்கு ஒன்றும் இல்லாததால் தொலைக்காட்சி பெட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். நேற்று காலை காவலாளி வீட்டுக்குச் சென்று பார்த்தபோது மாடியில் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தென்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரியகுளம் காவல்துறை துணை சூப்பிரிடென்டண்ட கீதா, காவல் ஆய்வாளர் ஜோதிபாசு மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். தேனியில் இருந்து மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர் களும் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து தென்கரை காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பெரியகுளத்திற்கு வரும் ஓபிஎஸ், பண்ணை வீட்டிற்குச் சென்று ஓய்வு எடுப்பதும், அங்கு அடிக்கடி கட்சி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதும் வழக்கம்.

