புதுடெல்லி: இந்தி மொழி திணிக்கப்படுவதாக தென்னிந்திய மாநிலங்களில் உள்ள அரசுகளும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு இந்தி மொழிப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில், இந்தி மொழி ஊக்குவிப்பு இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அலுவல்பூர்வ மொழிக்கான நாடாளுமன்றக் குழுவுக்கு தலைமை வகிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக ஒரு தரப்பு சாடியுள்ளது.
அரசு அலுவலகங்கள், தகவல் தொடர்புகளுக்கு இந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ள நாடாளுமன்றக் குழு, உயர் நீதிமன்றங்களிலும் வழக்காடு மொழியாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்க மொழிகளைப் பேசும் தென்னிந்திய மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய, வடஇந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான பகுதிகளில் இந்தி மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை 528 மில்லியனாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் கோப்புகளில் இந்தி மொழியைப் பயன்படுத்தாவிட்டால், அலுவல்பூர்வமாக எச்சரிக்கப்பட வேண்டும் என அமித் ஷா தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அலுவல்பூர்வ கடிதங்கள், தொலை நகல்கள், மின்னஞ்சல்களில் இந்தி மொழியைப் பயன்படுத்தாத ஊழியர்களின் வருடாந்திர செயல்பாட்டு அறிக்கையில் அது குறித்து குறிப்பிட வேண்டும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பரிந்துரை அறிக்கை கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை இன்னும் பொது வெளியில் வெளியிடப்படவில்லை.
எனினும், அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் குறித்து வெளிவந்துள்ள ஊடகச் செய்தியின் அடிப்படையில், மாநில அரசியல் தலைவர்கள் பலரும் கவலையும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், இந்தியைத் திணிப்பதற்கான அண்மைய முயற்சிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை என்றும் அவை நாட்டைப் பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"மத்திய அரசின் முயற்சி இந்தி பேசாத மக்களை பல விஷயங்களில் இரண்டாந்தர குடிமக்கள் போல பிரித்தாளுகின்ற தன்மை கொண்டவை. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்திற்கும் இது ஏற்புடையதாக இருக்காது," என்றும் முதல்வர் ஸ்டாலின் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

