சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தங்களுடைய நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பரந்தூர் பகுதி விவசாயிகளுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
கடந்த 80 நாள்களாக புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு இரண்டாவது விமான ஓடுதள பாதை அமைக்கப்பட்டாலும்கூட, அடுத்த சில ஆண்டுகளில் விமானப் பயணிகளைக் கையாள முடியாத நிலை ஏற்படும் என துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதையடுத்து, இந்திய விமான போக்குவரத்து துறை சார்பில் பரந்தூரில் ரூ.60 ஆயிரம் கோடி செலவில், 4,971 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியதை அடுத்து விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர்.
விமான நிலையம் அமைத்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்த விவசாயிகள், அத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி இன்று சட்டப்பேரவை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்தனர்.
மேலும் பல போராட்ட அறிவிப்புகள் வெளியானதை அடுத்து, மூன்று அமைச்சர்களைக் கொண்ட குழு, விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோருக்கு விவசாயம்தான் முக்கியத் தொழில் என்றும் தங்கள் கிராமம் பாதிக்கப்படக்கூடாது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், நிலமளிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றும், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பைவிட மூன்றரை மடங்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அமைச்சர்கள் உறுதியளித்ததாகக் குறிப்பிட்டனர்.
"எனவே கடந்த 80 நாள்களாக நாங்கள் நடத்தி வரும் போராட்டங்களை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வது எனவும் வரும் 17ஆம் தேதி (இன்று) அறிவித்திருந்த நடைப்பயணத்தை நிறுத்தி வைப்பது எனவும் முடிவெடுத்துள்ளோம்.
"வேறு ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின் அவை குறித்து அமைச்சர்களிடம் விவரம் தெரிவிப்போம்," என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பரந்தூர் பகுதியில் மீண்டும் போராட்டம் நடத்த மற்றொரு தரப்பினர் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

