'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அலுவலகத்துக்கு சீல் வைப்பு
நாகர்கோவில்: பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்த குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட்டுள்ள 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பின் நாகர்கோவில் அலுவலகத்திற்கு காவல்துறை நேற்று முன்தினம் சீல் வைத்தது. இது தொடர்பான அறிவிப்பையும் அலுவலக வாசலில் காவல்துறையினர் ஒட்டினர். மேலும், நாகர்கோவிலை அடுத்துள்ள வடக்கு சூரங்குடியில் உள்ள அந்த அமைப்பின் கிளை அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு:
11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்
மதுரை: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து, மேட்டூர் அணை இந்த ஆண்டில் மீண்டும் நிரம்பியுள்ளது. இதையடுத்து, அந்த அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. மதுரையில் உள்ள இடையபட்டியில் அதிகபட்சமாக 80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இந்தியாவின் மிகச்சிறந்த கைவினைப் பொருள்: தஞ்சாவூர் கலைத்தட்டு தேர்வு
புதுடெல்லி: இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாக தஞ்சாவூர் கலைத் தட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் வர்த்தகம்,தொழில்துறை அமைச்சு வெளியிட்டது. இந்திய அளவில் மிகச்சிறந்த கைவினைப் பொருள்களைத் தேர்வு செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக பொது வாக்கெடுப்பு இணையம் வழி நடைபெற்றது. இதில், இந்தியாவில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருள்கள் பங்கேற்றன. கைவினைப் பொருள்கள், விவசாயப் பொருள்கள், இயற்கைப் பொருள்கள், உற்பத்தி, உணவுப் பொருள்கள் ஆகிய ஐந்து வகைப் பொருள்களுக்கு மக்கள் வாக்களித்தனர். இதில் அதிக வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது.
வாடகைத்தாய் விவகாரம்: ஆதாரங்களை அளித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்
சென்னை: வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற விவகாரம் தொடர்பில் நடிகை நயன்தாரா , விக்னேஷ் சிவன் தம்பதியர் விசாரணைக்குழுவிடம் உரிய ஆதாரங்களை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இவ்விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடகைத் தாய் விவகாரத்தில் இத்தம்பதியர் விதிமுறைகளை மீறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய்முறையில் குழந்தை பெற பதிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்குரிய ஆதாரங்களை இருவரும் அளித்ததாகத் தெரிகிறது. விதிமுறைகளை மீறவில்லை என நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

