சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற பெயரில் அவர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் வடிவிலான அறிக்கையில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது தமது முதல் இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்தியா முழுமைக்கும் சமூகநீதியில் கூட்டாட்சிக் கருத்தியலில் நம்பிக்கை கொண்ட ஆட்சி அமைய வேண்டும் என்பது நமது அடுத்த இலக்கு. இதற்கான அரசியல் நடவடிக்கைகளில் தேர்தல் நேரத்தில் இறங்குவோம்," என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்படும் அவதூறுகள், தம் காதுகளை எட்டுமே தவிர, அவற்றை தம் மனதுக்குள் அனுமதிப்பது கிடையாது என்று கூறியுள்ளார்.
'மத்திய பாஜக அரசு ஆளுநரை வைத்து இரட்டை ஆட்சி நடத்துகிறதா' என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டுதான் ஆட்சி நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"நியமனப் பதவியான ஆளுநருக்கு உரிய பொறுப்புகள், அதிகார வரம்புகள் என்ன என்பதையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு உரிய கடமைகள், அதிகார வரம்புகள் என்ன என்பதையும் நமது அரசியல் சட்டம் மிகத் தெளிவாகவே வரையறுத்துக் கூறியுள்ளது.
"அதைப் புரிந்து நடந்துகொண்டால் யாருக்கும் பிரச்சினை இல்லை. தேவையற்ற சர்ச்சைகளுக்கும் இடம் இருக்காது," என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையை முழுமையாக மீளுருவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அதற்கான பெரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.
"நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காலதாமதம் ஆவதாலேயே நடக்காது என்று முடிவுக்கு வராதீர்கள். நீட் தேர்வை வைத்து மிகக் கொடூரமான சமூக அநீதியை இழைத்துக்கொண்டு இருக்கிறது பாஜக. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் அக்கட்சிக்கு பாடம் புகட்டுவதாக அமையும்," என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

