கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் அருகே உள்ள லெட்சுமிபுரம் பகுதியில் நாய் ஒன்று சுவரின் துவாரத்தில் சிக்கிக் கொண்டு விடியவிடிய வலியுடன் துடித்த நிலையில், தீயணைப்புப் படையினரின் உதவியுடன் மீட்கப் பட்டது.
லெட்சுமிபுரத்தில் பிரதாப் என்ப வர் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு பசியுடன் இருந்த நாய் ஒன்று நுழைந்துள்ளது.
ஆனால், அதற்கு தீனி எதுவும் கிடைக்காததால், வெளியே செல்ல வழியைத் தேடியபோது அதன் கண்ணில் வீட்டின் சுற்றுச்சுவரில் இருந்த துவாரம் தென்பட்டது.
அதன்வழியாக வெளியே சென்றுவிடலாம் என நினைத்து தலையை நுழைத்துள்ளது. ஆனால், தான் நினைத்தபடி தப்ப முடியாமல் விழி பிதுங்கி நின்றது.
அதன் தலை சுவருக்கு வெளியிலும் கழுத்துப் பகுதி துவாரத்திலும் சிக்கிக்கொண்டது.
இதனால் முன்னோக்கிச் செல்ல முடியாமலும் தலையை பின்னோக்கி இழுக்க முடியாமலும் அவதிப்பட்டது. ஒருசமயத்தில் தலையை உள்ளே இழுக்க முயற்சி செய்ததில் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதனால், தப்ப வழி யின்றி இரவு முழுவதும் தவித்தது.
நேற்று காலை தூங்கி எழுந்து வெளியே வந்த பிரதாப், நாய் சுவரில் சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரால் நாயை மீட்கமுடியாமல், தீயணைப்புப் படையினரின் உதவியுடன் சுவரின் துவாரத்தை சற்று பெரிதாக்கி நாயை மீட்டனர்.

