கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கோமதி யானை
தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் சங்கரநாராயண சுவாமி கோயில் உள்ளது. இந்த ஆலயத்தின் யானை கோமதிக்கு பிறந்தநாள் விழாவை கோயில் ஊழியர்களும் ஏராளமான பக்தர்களும் சேர்ந்து பாட்டு பாடி, கேக் வெட்டிக் கொண்டாடினர். யானைப் பாகன் சணல்குமார் கோமதிக்கு கேக் ஊட்டிவிட்டார். அதன்பிறகு, அதற்குப் பிடித்த பழங்கள், தேங்காய், கரும்பு ஆகியவற்றை வழங்கி உபசரித்தனர். கோமதி யானை உற்சாகத்துடன் பிளிறி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தது.
அரிசி, சர்க்கரைக்குப் பதிலாக ரூ.2,000 பணம்
புதுச்சேரி: ஒவ்வொரு தீபாவளியின்போதும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வசிக்கும் மக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் 10 கிலோ அரிசி, இரண்டு கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும். மூன்றரை லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இதன்மூலம் பயன் பெறுவார்கள். ஆனால், இந்த ஆண்டு இதற்குப் பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.2,000 வரவு வைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
உடலைச் சுமந்து சென்ற பெண்கள்
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த காளியப்பன் கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் காவேரியம்மாள், 82. இவரது கணவர் சுப்பிரமணியன் ஏற்கெனவே இறந்து போய்விட்டார். இந்நிலையில், மூட நம்பிக்கை, சடங்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக இறந்த மூதாட்டியின் உடலை பெண்கள் சுமந்து ஊரைச் சுற்றி வந்து புதிய புரட்சி செய்தனர். இறுதி அஞ்சலிக்குப் பிறகு மூதாட்டியின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கு ஒப்படைக்கப்பட்டது.
பச்சை நிறத்தில் மாறிய கடல்நீர்
தூத்துக்குடி: தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பூங்காவுக்குச் சென்ற பொதுமக்கள் வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் பச்சை நிறத்தில் இருப்பதைக் கண்டு அச்சம் அடைந்ததால் கடலருகே செல்லாமல் தொலைவிலேயே நின்றுகொண்டனர். அத்துடன், அலையின் வேகமும் அதிகமாக இருந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கடல்துறை நிபுணர்கள், கடலில் ஏற்படும் தட்பவெப்பநிலை மாற்றங்கள் அல்லது கடல்பாசிகளால் இதுபோல் நிறம் மாறியிருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
சாலையில் மீன் பிடித்த மக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் குளங்கள் நிரம்பி சாலையில் பாய்ந்த வெள்ளத்தில் மீன்கள் துள்ளி விளையாடின. நேற்று முன்தினம் இரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல் போட்டிபோட்டு பொதுமக்களில் சிலர் மீன் பிடித்துச்சென்றனர்.
முகாம்களில் மக்கள் தஞ்சம்
நாமக்கல்: மேட்டூர் அணைக்கு வரும் ஒரு லட்சத்து 95,000 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. ஒக்கேனக்கல்லில் அருவிகளே தெரியாத அளவுக்கு மூழ்கியபடி காவிரி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரியில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையம், பள்ளிப்பாளையத்தில் 600 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதேபோல், கரூர் மாவட்டம், தவிட்டுப் பாளையத்தில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

