சென்னை: மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் சொத்துகள் விற்பனை தொடர்பாக நடிகர்கள் பிரபு, ராம்குமாருக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த கூடுதல் மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சிவாஜிகணேசன் மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் சார்பில் சாந்தி திரையரங்கின் பங்கு, சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் 'அக்சயா ஹோம்ஸ் ரியல் எஸ்டேட்' நிறுவனமும் தங்களது சகோதரர்கள் பிரபு, ராம்குமார் தரப்பும் ஈடுபட்டு வருவதாகவும் முக்கிய வழக்கை விசாரித்து முடிக்கும்வரை இந்த சொத்து விற்பனைக்கு இடைக்காலத் தடைவிதிக்கவேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
பிரபு, ராம்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் முன்னி லையாகி, திரையரங்க விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டது.
அதேபோல் கட்டுமான நிறு வனம் சார்பில், சாந்தி திரையரங்கப் பங்குகள் முழுவதும் 2010ஆம் ஆண்டிலேயே கைமாறிவிட்டதாகவும் கட்டுமானப் பணிகள் முடிந்தபின்னர் குடும்பப் பிரச்சினை காரணமாக இவ்வழக்கு தொடரப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.
இம்மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலை யில், சாந்தி, ராஜ்வி தொடர்ந்த இடைக்கால வழக்கின் மனுக்களைத் தள்ளுபடி செய்து நேற்று நீதிபதி உத்தரவிட்டார்.
அதேசமயம் சொத்து தொடர் பான முக்கிய வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் தந்தையின் ரூ.270 கோடி மதிப்புள்ள சொத்துகளில் சகோதரா்கள் ராம்குமாா், பிரபு ஆகியோா் தங்களுக்கும் சரி விகிதத்தில் பங்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர் என்றும் சொத்துகளைத் தங்களுக்கும் பிரித்து வழங்கும்படி உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சாந்தி, ராஜ்வி ஆகியோா் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

