சென்னை: தமிழகத்தை நிலை குலைய வைத்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையக் குழு நேற்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடரில் அறிக்கையைத் தாக்கல் செய்தது.
அதில், சம்பவம் நிகழ்ந்தபோது மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மீதும் மூன்று வருவாய்த்துறை அலுவலர்கள் மீதும் துறை ரீதி யிலான நடவடிக்கை எடுப்பதற்குப் பரிந்துரை செய்துள்ளது.
அத்துடன், சம்பவத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்திய 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018, மே மாதம் 22ஆம் தேதி போராட்டம் நடந்தது.
அந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், காவல்துறையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமை யிலான ஒருநபர் ஆணையம் விசா ரணை நடத்தி, அறிக்கையை நேற்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் தாக்கல் செய்தது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சட்டபூர்வ வாரிசுகளுக்கு ரூ.50 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக வழங்கவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
விசாரணையில் காவல்துறை யினர் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளதாகவும் போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் மிக அலட்சியமாக அணுகியுள்ளதாகவும் ஆணையம் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களில் ஐவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுட் டுக்கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை எனவும் கலவரம் நடந்துகொண்டிருந்த போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் காவல் ஆய்வாளரும் ஊரில் இல்லை எனவும் அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

