மதுரை: மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனைகளான சங்கீதா, தீபா இருவரும் அனைத்துலக அளவில் போட்டிகள் பலவற்றில் கலந்துகொண்டு பதக்கங்களைக் குவித்துள்ளனர்.
ஆனால், இத்தனை பதக்கங் களைக் குவித்தும் தங்களுக்கான வேலை இதுவரை கிடைக்காததால் வருத்தத்தில் இருந்தனர்.
இதையடுத்து, "நாங்கள் பெற்ற பதக்கங்கள் எதுவுமே எங்களுக்கு வேண்டாம்," எனக் கூறி அவற்றை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் ஒப்படைக்க வந்தனர்.
ஆனால், கிராம உதவியாளர் பணியைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்படி ஆட்சியர் அறிவுறுத்தி யதை அடுத்து, இரு வீராங்கனை களும் தங்களது பதங்கங்களை ஒப்படைக்காமல் திரும்பிவிட்டதாகக் கூறியுள்ளனர்.
மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா, 40. இரு கால்களும் செய லிழந்த மாற்றுத் திறனாளி. இவர், லண்டன், துபாய், சீனாவின் பெய்ஜிங், ஜோர்டான் ஆகிய இடங்களில் நடந்த மேசைப்பந்து போட்டி கள், மாநில, தேசிய, அனைத்துலகப் போட்டிகளிலும் பங்கேற்று 40க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
அதேபோல், மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் தீபா, 40. போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி. இவரும் பூப்பந்து உலகக் கிண்ணத்தில் இரண்டு வெள்ளி, பெல்ஜியம் தடகளப் போட்டியில் ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம், ஜெர்மனி தடகளப் போட்டியில் இரண்டு வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.
2010ல் வீரதீரச் செயலுக்காக மாநில அரசின் 'கல்பனா சாவ்லா' விருதையும் பெற்றுள்ளார்.
இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக அனைத்துலகப் போட்டிகளில் ஜொலித்தும் இதுவரை வேலைவாய்ப்பு கிட்டாமல் கடைசி யாக ஆட்சியரை நாடித் தீர்வு கண்டுள்ளனர்.

