சென்னை: மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப் பேரவையில் நேற்று தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
இந்தியை அலுவல் மொழியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு அண்மையில் பரிந்துரை செய்திருந்தது.
இதனை அமல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், நேற்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் முன்மொழியப்பட்டது.
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் பேசுகையில், "முழுக்க முழுக்க இந்திக்காகவே பாஜக அரசின் இதயம் துடிக்கிறது.
"இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் பணியில் அமர முடியாத வகையில் அவர்களது இந்தி திணிப்புக் கொள்கை உள்ளது. ஆங்கிலத்தை மொத்தமாக அகற்றவும் பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது.
"ஆங்கிலத்தை அகற்றுவதற்கு பின்னால் இந்தியை அமரவைக்கும் எண்ணம்தான் அவர்களிடம் உள்ளது.
"இந்திக்கு தாய்ப்பாலும் இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது," என்றும் சாடியுள்ளார்.
"தமிழ்நாட்டின் மொழிக்கொள்கை என்பது தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள் கையே.
"தமிழ்மொழி உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகள் அனைத்தும் இந்திய அரசின் ஆட்சி மொழியாகவேண்டும். இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி மொழியை எவ்வகையிலும் திணிக்கக் கூடாது.
"இந்தியாவில் இந்தி மொழியை திணிப்பதையே மத்திய அரசு தனது வழக்கமாகக் கொண்டுள்ளது," என சுட்டிக் காட்டியுள்ள ஸ்டாலின், ஒரே நாடு ஒரே மொழி என்ற பெயரில் மற்ற தேசிய மொழிகளை அழிக்க முயற்சி செய்வதாகவும் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புக்குத்தான் என்று பாஜக நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

