தமிழிசை: தமிழ் வழியில்
மருத்துவம் படிக்க நடவடிக்கை
புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், "அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழியில் மருத்துவப் படிப்பைத் தொடர்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விருப்பப்பட்டவர்கள் தமிழ் மொழியில் மருத்துவம் படிக்கலாம். இதற்காக, மருத்துவப் பாட நூல்களைத் தமிழில் அச்சடிப்பதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன," என்றார்.
ஒரு கோடி ரூபாய் தங்கம் சிக்கியது
மீனம்பாக்கம்: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையக் கழிவறையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கிலோ 290 கிராம் தங்கத்தைச் சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். வெளிநாட்டில் இருந்து விமானத்தில் தங்கத்தைக் கடத்தி வந்த யாரேனும், அதிகாரிகளின் சோதனைக்குப் பயந்து இதுபோல் தங்கப் பையை விமான நிலையக் கழிவறையில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
சென்னை: நேற்று முன்தினம் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்காத பழனிசாமி தரப்பினர், நேற்று பங்கேற்றனர். ஆனால், அவை தொடங்கியதும் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அங்கீகரிக்கும்படி கோரி பழனிசாமி தரப்பினர் அவைக்குள் முழக்கமிட்டதால் பேரவை நிகழ்வில் பங்கேற்பதில் இருந்து பேரவைத் தலைவர் அப்பாவு ஒரு நாள் தடைவிதித்தார்.
இதையும் மீறி அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக பாதுகாவலர்கள் மூலம் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து அந்த வளாகத்திலேயே அமர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம் ஆற்றின் கரையோரக் கிராமங்களைச் சூழ்ந்த வெள்ளம்
மயிலாடுதுறை: மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து, அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்படும் நிலையில், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல், கோரைத்திட்டு உள்ளிட்ட நான்கு கிராமங்களில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. அத்துடன், கத்தரி, வெண்டை, பூச்செடிகளும் தண்ணீரில் மூழ்கின. மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
'சிறைக் கைதிகளுக்கு வேளாண்
துறையில் பணி வழங்கப்படும்'
புதுச்சேரி: புதுச்சேரி காளாப்பட்டில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் கைதிகளைக் கொண்டு இயற்கை விவசாயப் பண்ணை அமைக்கப் பட்டுள்ளது. அதனை வேளாண் அமைச்சர் தேனி ஜெயக்குமார் பார்வையிட்டார். விவசாயப் பணி தெரிந்த கைதிகள் விடுதலையானால் அவர்களுக்கு வேளாண் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். "இது ஒரு சிறைச்சாலை போல் இல்லை. ஆடு, மாடு, கோழிகளுடன் ஒருங்கிணைந்த பண்ணை மயமாக உள்ளது. சிறைவாசிகளின் உழைப்பு இந்த பண்ணை மயத்தில் தெரிகிறது. சிறையை விட்டு வெளியே வரும் கைதிகளுக்கு அவர்கள் சரியான பாதையில் நடைபோட வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்," என்று அமைச்சர் கூறினார்.

