சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணைய அறிக்கையை தமிழக அரசு தாமதமின்றி சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருப்பதை வரவேற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது அப்போதைய மாநில உள்துறையின் செயல்பாடு குறித்து, விசாரிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்துறை நிர்வாகத்தின் தலைமை அதிகாரிகள் செயல்பட்ட விதம் குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, நூறாவது நாளன்று பொதுமக்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பள்ளி மாணவி உட்பட 14 பேர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள முத்தரசன், இச்சம்பவத்தின்போது நூற்றுக் கணக்கானோர் படுகாயமடைந்தனர் என்றும் காவல்துறை தரப்பில் ஒரே ஒருவர் மட்டும் காயமடைந்தார் என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.
"ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரித்த ஆணையம் காவல் துறையின் வரம்பு மீறிய செயலையும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தையும் உறுதி செய்து, அதற்கு காரணமானவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.
"மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையில் உள்துறை நிர்வாகத்திற்கு பொறுப்பான முதல்வரும் அமைச்சரவையும் பெரும் முதலீட்டில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்விளைவுகள் குறித்து பரிசீலித்தார்களா? மக்கள் நலன் கருத்தில் கொள்ளப்பட்டதா?" என முத்தரசன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.
உள்துறை தலைமையின் வழிகாட்டல் இல்லாமல், உள்ளூர் மட்ட காவல்துறையினர் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டார்களா என்றும் குடிமக்கள் 14 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றும் கேட்டுள்ள முத்தரசன் இதுபோன்ற வினாக்களுக்கு ஆணைய அறிக்கையில் விளக்கம் ஏதுமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தோர் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசின் நிரந்தரப் பணியிடத்தில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்பட, நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை தமிழக அரசு முழுமையாக ஏற்க வேண்டும் எனவும் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

