செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
41385eab-c2e2-4906-9f86-506802806c3e
-

'தவறாகப் பேசமாட்டேன்' என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: நாக்கை வெட்டுவதாக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில் பாஜக மதுரை மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அதில், "இனிமேல் தவறாக பேசமாட்டேன்," எனக் குறிப்பிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்து மதத்தையும் கடவுள்களையும் மோசமாக விமர்சிப்பவர்கள் கடுமையாகத் தாக்கப்படுவார்கள் என்று மகா. சுசீந்திரன் பேசி இருந்தார். இதையடுத்து அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஜெயா மரணம்: தம் மீது பழிபோடுவது ஒன்றும் புதிதல்ல என்கிறார் சசிகலா

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தம் மீது பழி போடப்படுவதை தாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என சசிகலா தெரிவித்துள்ளார். இதுபோன்று தம் மீது பழி போடுவது ஒன்றும் புதிதல்ல என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். தம்மையும் ஜெயலலிதாவையும் எப்படியாவது பிரித்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட ஒருதரப்பு முயற்சி மேற்கொண்டது என்றும் அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவே தாங்கள் இருவரும் சிறிது காலம் பிரிந்து இருந்து என்ன நடக்கிறது என்று கண்காணித்ததாகவும் சசிகலா கூறியுள்ளார். விசாரணை ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழனிசாமி, அதிமுக எம்எல்ஏக்கள் கைது

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களை காவல்துறை கைது செய்தது. இதுகுறித்து தகவல் பரவியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.