தூத்துக்குடி: தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
வகுப்புகளைப் புறக்கணித்த பெரும்பாலான மாணவர்கள், இந்தித் திணிப்பை எந்த வகையிலும் ஏற்க இயலாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
நாட்டில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் இந்தியைப் பயிற்று மொழியாக அறிவிப்பது, மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு முன் வைத்துள்ளது. இதற்கு அதிபரின் ஒப்புதலைப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகம், தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்தித் திணிப்புக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று தூத்துக்குடியில் இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும் இந்தித் திணிப்பை எதிர்த்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கிடையே இந்தித் திணிப்புக்கு எதிராக திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.