பெண் காவலர்களிடம் மனம்விட்டுப் பேசலாம்; முதற்கட்டமாக கோவையில் அறிமுகம்
சென்னை: கல்லூரி மாணவிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் 'போலிஸ் அக்கா' என்ற புதிய திட்டத்தை தமிழகக் காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
முதற்கட்டமாக, கோவை மாநகரில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
கோவையில் ஏராளமான கல்லூரிகள் இயங்கி வருவதாலும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளம் மாணவிகள் அங்கு தங்கி படிப்பதாலும், இத்திட்டம் அறிமுகமாகி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் உளவியல், பாலியல் ரீதியில் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். எனினும் அவை குறித்து யாரிடமும் வெளிப்படையாகப் பேச முடியாத சூழல் பலருக்கு ஏற்படுகிறது.
பெற்றோர், தோழிகள், கல்லூரி நிர்வாகம் என்று யாரிடமும் கலந்தாலோசிக்க இயலாமல், மன அழுத்தத்துக்கு ஆளாகும் மாணவிகள் சிலர், தவறான முடிவுகளை எடுக்க நேரிடுகிறது," என்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள்.
அவ்வாறு சிக்கலில் உள்ள மாணவிகளுக்கு உதவும் வகையில் 'போலிஸ் அக்கா' திட்டம் அறிமுகமாகி உள்ளது என்கிறது காவல்துறை.
இதன் மூலம் குற்றச்செயல்களை முன்கூட்டியே தடுக்க முடியும் என்றும் மாணவிகள் பாதிக்கப்பட்ட பின்னர் காவல் நிலையத்தை அணுகாமல், முன்கூட்டியே தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
"எனவே மாணவிகள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தி பெண் காவலர்களை தங்கள் சகோதரியாக நினைத்து புகார்களைத் தெரிவித்து தீர்வு காணலாம் என்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
'போலிஸ் அக்கா' திட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்துப் பேசிய அவர், இத்திட்டத்துக்காக 37 காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் 15 நாள்களுக்கு ஒருமுறை கல்லூரி மாணவிகளைச் சந்தித்துப் பேசி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்த்து வைப்பதுதான் இவர்களுடைய முக்கியப் பணி என்றும் கூறினார்.
"இத்திட்டத்துக்காகப் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு கல்லூரிகளில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவிகள் தங்களுடைய பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் உள்ள தடைகள், காரணங்களை அகற்றி, அவர்களைப் பேச வைத்து, காவலர்கள் தீர்வு காண்பார்கள்," என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், உடன் படிக்கும் மாணவர்களால் தொல்லை, வெளி ஆட்களிடம் இருந்து வரும் மிரட்டல்கள், சமூக ஊடகங்கள் மூலம் எழும் சிக்கல்கள் ஆகிய அனைத்துக்கும் தீர்வு காணப்படும் என்றும் பெண் காவலர்களின் கைபேசி எண்கள் மாணவிகளுக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

