சென்னை: உலகப் பொருளியல் சரிவு ஏற்பட்டாலும் தமிழகத்துக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (படம்) கூறியுள்ளார். சட்டமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் செலவினங்களுக்கான முதல் துணை மதிப்பீடுகள் மீதான பதில் உரையில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
கடந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை, 4.61 விழுக்காட்டில் இருந்து 3.38 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், மத்திய அரசு அறிவித்த கடன் எல்லைக்குள் வந்ததால் மாநிலத்தின் கடன் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது என்றார்.
உலகப் பொருளியல் நெருக்கடி ஏற்படும் என்ற அச்சம் நிலவும் சூழலில், அவ்வாறு நேர்ந்தால் தேவைப்படுமளவு கடன் வாங்கும் திறனை தமிழக அரசு உருவாக்கி இருப்பதாகக் கூறினார்.
கடன் பற்றாக்குறையைக் குறைத்ததால் ஆண்டுக்கு ரூ.1,240 கோடி வட்டியைக் குறைக்க முடிந்திருப்பதாகவும் திரு பழனிவேல் தியாகராஜன் சொன்னார்.
"ஏழு ஆண்டுகளாகச் சரிந்த பற்றாக்குறையை நிறுத்துவது சாதாரண செயல் அல்ல. உலகிலேயே சிறப்பான ஆலோசனை பெறுவதால், முதல்வரின் பாதுகாப்பால் வரும் விளைவு இது.
"ஒருவேளை உலகம் பொருளியல் சரிவைச் சந்தித்தாலும் தமிழக அரசு ஏற்கெனவே எடுத்திருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, மற்ற மாநில அரசாங்கங்கள், மத்திய அரசாங்கம் ஆகியவற்றைவிட தமிழகத்துக்குப் பாதிப்பு குறைவாகவே இருக்கும்," என்று அவர் உறுதிகூறினார்.
உலகப் பொருளியல் நெருக்கடி ஏற்படாவிட்டால், ஆண்டுதோறும் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையிலான செலவினங்கள் அதிகரிக்கவும் நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து குறையவும் வாய்ப்பு இருப்பதை அமைச்சர் தமது உரையில் சுட்டினார்.

