சென்னை: தமிழகத்தில் பள்ளிக்கல்வி, நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் 11,253 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் அவர் அறிக்கை வெளியிட்டார்.
அரசுப் பள்ளிகளில் ஏறத்தாழ 26 ஆயிரம் புதிய வகுப்பறைகள், 7,500 கி.மீ. சுற்றுச்சுவர் ஆகியவற்றைக் கட்டுவதற்கும் பராமரிப்புப் பணிகளுக்கும் மொத்தம் ரூ.12,300 கோடி நிதி தேவை எனக் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
இத்திட்டங்களைப் படிப்படியாக நிறைவேற்ற 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' அறிவிக்கப்பட்டதாகவும் அதன்கீழ், நடப்பு ஆண்டுக்கு ரூ.1,430 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
"தரமான கல்வியை அரசுப் பள்ளிகள் வழங்கி வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.
அதிகரித்து வரும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் ரூ.800 கோடியில் 6,000 வகுப்பறைகளும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.250 கோடியில் 1,200 வகுப்பறைகளும் நடப்பு ஆண்டில் கட்டப்படும்.
"பள்ளிகளின் பராமரிப்புக்காக கூடுதலாக ரூ.115 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது," என்றார் திரு ஸ்டாலின்.
அத்துடன், சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள பழுதடைந்த சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும்.
இதற்காக, அரசின் சிறப்பு நிதியாக, நடப்பு நிதியாண்டிலேயே ரூ.2,200 கோடி வழங்கப்பட்டு, 4,600 கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
"சிங்காரச் சென்னை 2.0, மாநில நிதிக் குழு மானியத் திட்ட நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி (நபார்டு) வங்கி நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து, 7,388 கோடி ரூபாயைப் பயன்படுத்தி 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்.
"மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதால், அன்றாடம் சராசரியாக 44 லட்சம் பெண்கள் பலனடைகிறார்கள். இதன்மூலம் மகளிருக்கு ரூ.2 ஆயிரம் கோடி சேமிப்பாக மாறியுள்ளது," என்று முதல்வர் கூறினார்.
"மேலும் ரூ.500 கோடியில் 1,000 புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. பாதுகாப்பான நிலையில் உள்ள 1,000 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதியுதவியில் 2,213 டீசல் பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் ஆகியவற்றை வாங்கவும் உலக வங்கி ஆதரவுடன் மேலும் 1,000 இலவசப் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்று முதல்வர் கூறினார்.

