சென்னை: சென்னை சாலைப் போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு அபராதத் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இனி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருடன் பயணம் செய்பவர் மது அருந்தாமல் இருந்தபோதும் அவருக்கும் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பதுபோல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகரக் காவல்துறை அறிவித்து உள்ளது.
ஆனால், சவாரி செல்லும் ஆட்டோ, டாக்சியில் ஓட்டுநருக்கு மட்டும் அபராதம் விதிக்கப்படும்.
மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.
இவ்வேளையில், சாலைகளில் அவசர மருத்துவ உதவி வாகனம் (ஆம்புலன்ஸ்), தீயணைப்பு வாகனம் போன்ற அவசரகால வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் ரூ.10,000, வாகன உரிமம் இல்லையென்றால் ரூ.5000 அபராதமாக விதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைக் கவசம் (ஹெல்மெட்) அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.100க்கு பதில் இனி ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
தேவையில்லாமல் வாகன ஒலி (ஹாரன்) எழுப்புவோர், புகையை அதிக அளவில் வெளியிடும் வாகனங்களை ஓட்டுவோருக்கு ரூ.1,000 அபராதம்.
சாலையில் வாகனப் பந்தயம் அல்லது சாகசங்களில் ஈடுபட்டால் ரூ.10,000 அபராதம் செலுத்த நேரிடும். கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டோ அதிவேகமாகவோ வாகனம் ஓட்டினால் இனி ரூ.1000க்கு பதில் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
சோதனையின் போது ஓட்டுநர் உரிமத்தை தர இயலாவிட்டால் ரூ.1500 அபராதம் செலுத்தவேண்டும்.
புதிய விதிகளின்கீழ், காப்பீடு செய்யாத வாகனத்தை இயக்கினால் 4,000 ரூபாயும் பதிவு செய்யப்படாத வாகனத்தை இயக்கினால் 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

