செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
f46ea98a-e277-409c-957f-0db998349785
-

'பிரெய்லி' வடிவில் இலவசமாக திருக்குறள் உட்பட 45 சங்க நூல்கள்

மதுரை: பார்வையற்றோருக்கு இலவசமாக 'பிரெய்லி' வடிவில், திருக்குறள் உள்ளிட்ட 45 சங்க இலக்கிய நூல்களை வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. திருக்குறளை தமிழிலும் ஆங்கிலத்திலும் 'பிரெய்லி' வடிவில் வெளியிட உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் "பிரெய்லி வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள திருக்குறள் உள்ளிட்ட 45 சங்க இலக்கிய நூல்களை பார்வையற்றோருக்கு மத்திய செம்மொழி ஆய்வு மையம் சார்பில் இலவசமாக வழங்கப்படுவதை அறிந்து மத்திய செம்மொழி ஆய்வு மையத்தையும் தமிழக அரசையும் உயர் நீதிமன்றம் பாராட்டுகிறது. இவ்வாறு சங்க இலக்கிய நூல்கள் 'பிரெய்லி' வடிவில் இலவசமாகக் கிடைப்பதைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்த வேண்டும்," என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

போதை தரும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின்றி விற்றால் உரிமம் ரத்து

சென்னை: போதை தரும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யும் மருந்துக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசின் மருத்துவத் துறை அறிவித்துள்ளது. "அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளைத் தவறான பயன்பாட்டிற்காகவோ மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலோ விற்பனை ரசீதுகள் இல்லாமலோ விற்பது மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டம், மருந்துகள் விதி ஆகியவற்றின்கீழ் விதிமீறலாகக் கருதப்படும். இத்தகைய விதிமீறல்கள் கண்டறியப்படும் மருந்துக் கடைகளின் உரிமங்களும் விநியோகம் செய்யும் மொத்த மருந்து விற்பனையாளர்களின் உரிமங்களும் ரத்து செய்யப்படும்," என்று மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஒரு சில நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைத்த அளவைவிட அதிகமாக உட்கொண்டால், அவை போதை உணர்வை ஏற்படுத்தும். இத்தகைய மருந்துகளை விதிகளை மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு ஒரே நாளில்

ரூ. 2 கோடிக்குமேல் ஆடு விற்பனை

அய்யலூர்: திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்படுவது வழக்கம். தீபாவளியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற சந்தையில் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள் ஆடுகளை வாங்கிச்சென்றனர். வழக்கமாக ரூ.5,000க்கு விற்பனையாகும் ஆடுகள் நேற்று ரூ.7,000 வரை விற்கப்பட்டன. நேற்று மட்டும் அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்குமேல் விற்பனை நடைபெற்றது. ரூ.4 கோடி வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும், முன்னதாகவே வேறு பகுதிகளில் ஆட்டுச்சந்தைகள் நடத்தப்பட்டதால் நேற்று அய்யலூரில் குறைவாகவே ஆடுகள் விற்பனையானதாகவும் கூறப்பட்டது.

ரூ. 50 லட்சம் பெறுமான புகையிலைப் பொருள், குட்கா பறிமுதல்; ஐவர் கைது

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் ஆகியவற்றின் விற்பனையைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஐவர் கைது செய்யப்பட்டனர். கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களுடன் ஆட்டோ ஒன்று, இருசக்கர வாகனங்கள் இரண்டு போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் ஆகியவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம். கைது செய்யப்பட்டவர்கள், பெங்களூரில் இருந்து தடைசெய்யப்பட்ட இந்தப் பொருள்களை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விற்பனை செய்ததாகக் கூறப்பட்டது.