புதுடெல்லி: கடந்த ஆண்டு நிலவிய அதீத வெப்ப பாதிப்பின் காரணமாக வேளாண்மை, உற்பத்தி, சேவை உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுக்கு ஏறத்தாழ ரூ.13 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கான அனைத்துலகக் கூட்டமைப்பு சாா்பில் பருவநிலை வெளிப்படைத் தன்மை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் நிலவிய மிதமிஞ்சிய வெயில் காரணமாக உற்பத்தி, கட்டுமானம் போன்ற பல்வேறு துறைகளிலும் பணியாளா்களின் வேலைத்திறன் பாதிக்கப்பட்டு 159 பில்லியன் டாலர் (ரூ.13 லட்சத்து 3 ஆயிரம் கோடி) வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 5.4 விழுக்காடு. அதிகமான வெயிலால் 16,700 ஊழியர்கள் பணி நேர இழப்பும் ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் இந்தியாவில் தொழிலாளர் உற்பத்தித்திறன் 5 விழுக்காடு வீழ்ச்சியையும் வெப்பநிலை 2.5 டிகிரி செல்சியசாக அதிகரித்தால் தொழிலாளர் உற்பத்தித்திறன் இரு மடங்கு வீழ்ச்சியையும் வெப்பநிலை 3 டிகிரி செல்சியசாக அதிகரித்தால் வீழ்ச்சி 2.7 மடங்காகவும் இருக்கும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2016 முதல் 2021 வரை நாட்டில் ஏற்பட்ட வெள்ளம், புயல், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்களால் 3.6 கோடி ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டிருந்த பயிா்கள் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் விவசாயிகளுக்கு சுமாா் ரூ.30,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் மழைப்பொழிவு முறை பெருமளவில் மாற்றம் கண்டுள்ளது. அதன்காரணமாக வேளாண்மை, மீன்வளத் துறைகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதீத பருவநிலை மாற்றங்களைத் தவிா்ப்பதற்காக, எரிசக்தித் துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
பருவநிலை மாற்ற விளைவுகளை எதிா்கொள்வதில் வளா்ந்து வரும் நாடுகளுக்கு வளா்ச்சியடைந்த நாடுகள் உதவவேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

