ராமநாதபுரம்: கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 10 மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர்களில் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த வீரவேல், 32, என்ற மீனவர் ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, ேமல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
சிறிய அளவில் காயமடைந்த இதர ஒன்பது மீனவர்களுக்கும் கடற்படை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மாணகிரி பகுதியைச் சேர்ந்த மீனவர் வீரவேலின் தொடைப்பகுதி யிலும் வயிற்றுப் பகுதியிலும் இரு குண்டுகள் பாய்ந்ததை அடுத்து, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், மீனவரின் உயிருக்கு ஆபத்தில்லை என மருத் துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக இலங்கை கடற்படை யினரே தமிழக மீனவர்களுக்கு அவ்வப்போது பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில், தற்போது இந்தியக் கடற்படையினர் மீனவர்களைத் துப்பாக்கியால் சுட்டு இருப்பது மீனவ சமூகத்தினர் மத்தியில் பெரும் மனக்குமுறலை ஏற்படுத்தி உள்ளது.
தெற்கு மன்னார் வளைகுடாப் பகுதியில் நேற்று அதிகாலை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இந்தியக் கடற்படையினர் மீனவர்களின் படகை நிறுத்தும்படி கூறியும் அவர்கள் படகை நிறுத்தாமல் சென்றதால், சந்தேகம் அடைந்த கடற்படையினர் படகை நோக்கி சுட்டதில் வீரவேல் காயமடைந்தார்.
இதையடுத்து, இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் வீரவேல் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அங்கு வந்து விசாரித்தார். ஏராளமான காவலர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்திய கடற்படை உயர் அதிகாரிகள் சுற்றுக்காவல் கப்பலில் இருந்த கடற்படை வீரர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

