மதுரை: "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்ற விவரம் தெரியாது," என மத்திய சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015ல் மத்திய அரசு அறிவித்தது.
அதன்பிறகு ஏழு ஆண்டுகள் ஆகியும் அதற்கான பணிகள் தொடங்காமல் இருப்பது குறித்து தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் கேள்விகள் எழுப்பின.
இருப்பினும், அதுகுறித்த எந்த ஓர் உறுதியான தகவலையும் மத்திய அரசு கூறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இம்மருத்துவ மனையின் கட்டுமானப் பணிகள் குறித்து தென்காசி மாவட்டத்தின் பாண்டியராஜா என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்துள்ள மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சு அதிகாரிகள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடும் நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்துவருவதாகக் கூறியுள்ளனர்.
2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கட்டுமானப் பணிகள் முடியும் என்றும் திட்டத்தின் மொத்த மதிப்பீடான 1977.8 கோடி ரூபாயில் 82 விழுக்காட்டுத் தொகையை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜைய்கா நிறுவனம் வழங்கும் என்றும் மீதித் தொகையை மத்திய அரசு வழங்கும் எனறும் தெரிவித்துள்ளனர்.
எனினும், கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்ற தேதி சம்பந்தமான தகவல்கள் தெரிய வில்லை என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மதுரை மருத்துவமனையோடு அறிவிக்கப்பட்ட இமாச்சலப்பிரதேச எஸ்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து திறந்துவைக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் பதில் ஏமாற்றம் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.