செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8df0ffd6-d756-4ceb-bf56-c28e91ace7e0
-

'தவறு நடந்தால் கருத்து கூறுவேன்'

புதுடெல்லி: தெலுங்கானா, புதுச்சேரியில் மட்டுமன்றி தமிழகத்தில் தவறு நடந்தாலும் கருத்து சொல்ல தயங்கமாட்டேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் தமது மூன்றாண்டு அனுபவங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக அவர் வெளியிட்டார். அப்போது தமிழிசை பேசியபோது, மக்கள் நலனுக்காகவே அரசியலுக்கு வந்ததாகவும் எப்போதும் மக்களோடு மக்களாக இயல்பாக இருக்க விரும்புவதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள் என்று ஒரு சிலர் என்னை கேட்கிறார்கள்? "தமிழ்நாட்டில் மூக்கையும் நுழைப்பேன், தலையையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன். எனது கருத்தை தயங்காமல் சுட்டிக்காட்டுவேன். என்னை யாரும் தடுக்கமுடியாது," என்றார்.

ஹெலிகாப்டர் விபத்து: இருவர் பலி

இடாநகர்: அருணாச்சலப் பிரதேச மாநிலம், அப்பர் சியாங் மாவட்டம், டுட்டிங் தலைமையகத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் நேற்று ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் இருவர் மாண்டனர். அந்த ஹெலிகாப்டரில் ஐவர் இருந்ததாகக் கூறப்பட்டது. மீட்புப் பணி தொடர்கிறது.

விபத்து நடத்த மலைப்பகுதிக்குச் செல்ல சரியான சாலை வசதிகள் இல்லாததால் ஹெலிகாப்டர் மூலமும் வனப்பகுதி வழியாகவும் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளதாகக் கூறப்பட்டது.

கைதிகள் திருந்தி வாழ அறிவுரை

கோவை: கோவையில் கஞ்சா வழக்கில் கைதாகி விடுதலையான நூற்றுக்கும் மேற்பட்டோருடன் காவலர்கள் கலந்துரையாடினர். இனிமேல் கஞ்சா விற்பனையைக் கைவிட்டு, திருந்தி வாழவும் அதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் காவலர்கள் உறுதி அளித்தனர். கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்றும் அனைவரும் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பள்ளிப் பேருந்தில் கேமரா கட்டாயம்

சென்னை: பள்ளி வாகனங்களில் சிக்கி மாணவர்கள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில், அனைத்து பள்ளிப் பேருந்துகளிலும் முன்புறமும் பின்புறமும் கேமராவும் கேமரா, பின்பகுதியில் சென்சார் கருவிகளையும் பொருத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

'10 கோடி கொவிஷீல்ட் தடுப்பூசி காலாவதியாகி விட்டன'

புனே: கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே கொவிஷீல்ட் உற்பத்தியை நிறுத்திவிட்டதாகவும் அந்த சமயத்தில் கையிருப்பில் இருந்த 10 கோடி தடுப்பூசி காலாவதியாகி வீணாகி விட்டதாகவும் சீரம் நிறுவனத்தின் உரிமையாளர் ஆதர் பூனவல்ல தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா கிருமிப் பரவல் குறைந்துவரும் நிலையில், கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதில் மக்களிடம் ஆர்வமில்லாமல் போய்விட்டது. இதனால், இதற்கான தேவை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கேதார்நாத்தில் மோடி வழிபாடு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்குச் சென்று பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பழங்குடி மக்களின் கையால் வெண்ணிறத்தில் நெய்யப்பட்ட பாரம்பரிய உடையை அணிந்திருந்த அவர், ரூ.3,400 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கும் கேதார்நாத் கம்பிவட கார் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.