தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக, காவல் உதவி ஆணையா் உள்பட நால்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை, கடந்த 18ஆம் தேதி தமிழக சட்டப்பேர வைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.
அறிக்கையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக, அப்போதைய ஐஜி சைலேஷ் குமாா் யாதவ், தூத்துக்குடி எஸ்பி மகேந்திரன், டிஎஸ்பி லிங்க திருமாறன், தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் திருமலை உட்பட காவல்துறையைச் சோ்ந்த 17 போ் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இதையடுத்து, சம்பவம் நடந்த சமயத்தில் காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இவர், திருநெல்வேலியில் சமூக நீதி, மனித உரிமைகளுக்கான பிரிவில் உதவி ஆணையராகச் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தின் முன்பு பணியிலிருந்த சுடலைக்கண்ணு, சங்கா், சதீஷ் ஆகிய மூன்று காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இதனிடையே, பொதுமக்கள்தான் காவல்துறையினரைத் தாக்கியதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், ஆணையத்தின் அறிக்கையில் தவறுகள் அனைத்தும் காவல்துறை மீதுதான் எனக் கூறப்பட்டுள்ளது.
எனவே, இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் தனது வருத்தத்தை தெரிவிக்கவேண்டும் என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு வலியுறுத்தி உள்ளார்.
அத்துடன், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூடு பற்றி தெரிந்துகொண்டேன் எனக் கூறியதும் பொய் என அம்பலப்படுத்தி உள்ளது ஆணையத்தின் அறிக்கை. தூத்துக்குடி போராட்டம், துப்பாக்கிச்சூடு பற்றிய ஒவ்வொரு தகவலும் நொடிக்கு நொடி காவல்துறை சார்பில் அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் பழனிசாமியை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவருவது பற்றி முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

