செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
3caf052d-f6a9-41dc-810b-b04cfa313123
-

கூடுதல் கட்டணம் வசூலித்தால் திருப்பித் தர நடவடிக்கை

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அதனைப் பயணிகளிடம் திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து பல்வேறு இடங்களில் குழுக்கள் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கடைவீதிகளில் அலைமோதிய கூட்டம்

சென்னை: தீபாவளிக்கு இன்று ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொவிட்-19 கிருமிப் பரவலால் அதிகம் கடைவீதிகளில் கூடாத மக்கள், இப்போது பட்டாசு, புத்தாடை, இனிப்புகள் வாங்குவதற்காகத் திரண்டனர். இதனால், விற்பனை அமோகமாக நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி தொடர்ந்து வருகிறது. பல இடங்களில் நெரிசல் அதிகமாக இருப்பதால், திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவலர்கள் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை விடுத்து வருகின்றனர்.

உணவுப் பொருள்கள்மீது காலாவதி தேதி குறிப்பிடுவது கட்டாயம்

புதுச்சேரி: சுகாதாரமற்ற முறையில் இனிப்புகள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள இனிப்பு விற்கும் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இனிப்பு தயாரிக்கும் இடம், பலகாரங்கள் தயாரிக்கப் பயன்படுத்தும் எண்ணெய், நெய் உட்பட அனைத்துப் பொருள்களின் தரத்தையும் சோதித்து, 60 பலகாரங்களை ஆய்வுக்கும் எடுத்துச் சென்றனர்.

தரமற்ற முறையில் பலகாரங்களைத் தயாரித்து விற்பவர்களுக்கு 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ள உணவுப் பாதுகாப்பு அதிகாரி பாலகிருஷ்ணன், பொருள்களின் காலாவதி தேதி அனைத்து உணவுப் பொருள்களிலும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

விபத்தில் சிக்கிய ஆடவருக்கு உதவிய முதல்வர்

தூத்துக்குடி: சென்னை அண்ணாசாலை டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் அருகே பைக் வாகனத்தில் சென்ற அருள்ராஜ் என்ற ஆடவர் விபத்தில் சிக்கினார். அவ்வழியாகச் சென்ற முதல்வர் ஸ்டாலின், தன் காரை நிறுத்தி, தலையில் பலத்த காயம் அடைந்த அருள்ராஜை ஆட்டோ மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். காவலர் ஒருவரையும் உதவிக்கு அனுப்பினார்.

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் சாலைப் பயணங்களின்போது போக்குவரத்தைச் சீரமைக்கவும் பாதுகாப்பிற்காகவும் நிற்கக்கூடிய காவலர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகள், நெருக்கடியான இடங்களில் மட்டும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

12 அடி உயர கோல்கத்தா காளி:

திருப்பூரில் இருந்து கர்நாடகா பயணம்

அவிநாசி: அவிநாசி அருகே ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 12 அடி உயர கோல்கத்தா காளி சிலை, கர்நாடக மாநிலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இதற்காக, கடந்த ஆறு மாதமாக ஆறு சிற்பிகள் இந்தச் சிலையை வடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஒரே கல்லில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலை 10 தலைகள், ஏகசூலம், சங்கு, சாட்டை, வில் அம்பு, டமாரம் உட்பட பல ஆயுதங்களுடன் பூர்த்தியாகி உள்ளது. இன்று (அக்டோபர் 23) லாரியில் கர்நாடகா கொண்டு செல்லப்பட்டு, விரைவில் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் நடத்தப்படவிருக்கிறது.