சண்டிகார்: தமிழ்நாட்டில் துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நிலவியதாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அதிமுக ஆட்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டதாக தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் இப் போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம், சண்டிகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டு பேசியபோது, "தமிழகத்தில் 2017 முதல் 2021 வரை நான்கு ஆண்டுகள் தமிழக ஆளுநராக நான் பணியாற்றி உள்ளேன். அந்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது. அங்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் ரூ.50 கோடிக்கு விற்கப்பட்டு வந்தது," எனச் சொன்னார்.
"ஒரு ஆளுநராக நான் எனது பணிக்காலத்தில் தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு 27 துணைவேந்தர்களை சட்டப்படி நியமித்துள்ளேன்," என்றும் கூறிய அவர், அதனால் இதுபோன்ற பணி களை எப்படிச் செய்யவேண்டும் என்பதை பஞ்சாப் அரசு தன்னிடம் இருந்து கற்றுக்கொள்வது மிகவும் நல்லது என்றும் தெரிவித்தார்.
"பஞ்சாப் மாநிலத்தில் யார் திறமையானவர், யார் திறமையற்றவர் என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆனால், கல்வியின் தரம் உயர வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்," என்றார்.
தமிழக ஆளுநராக புரோகித் இருந்தபோது, அதிமுக ஆட்சித் தலைமையில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக பல துணைவேந்தர்களை நியமித்தார் என்ற குற்றச் சாட்டும் எழுந்தது.
பல்வேறு சர்ச்சைகளிலும் முறைகேடுகளிலும் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, பன்வாரிலால் புரோகித்தால்தான் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அதிமுக ஆட்சியில் துணைவேந்தர் பதவிகள் விற்கப்பட்டதாகக் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

